வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர, ருமேனியாவின் புக்கரெஸ்டிற்கு உத்தியோகபூர்வ பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். அக்டோபர் 21 முதல் 26 வரை நடைபெறவுள்ள இப்பயணத்தின் ஒரு பகுதியாக, அக்டோபர் 22 அன்று இலங்கைக்கும், ருமேனியாவுக்கும் இடையிலான இருதரப்பு அரசியல் ஆலோசனைகளின் ஆறாவது சுற்று நடைபெறவுள்ளது. மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான தொழிலாளர் ஒத்துழைப்பு குறித்த கூட்டு பணிக்குழுவின் முதலாவது கூட்டமும் இப்பயணத்தின் போது இடம்பெறவுள்ளது.
புக்கரெஸ்ட் பயணத்தின் போது, பிரதி அமைச்சர் ஹேமச்சந்திர, ருமேனியாவின் தொழிலாளர் அமைச்சரைச் சந்திப்பதுடன், அந்நாட்டின் தொழிலாளர் மற்றும் உள்நாட்டு விவகாரங்களுக்குப் பொறுப்பான அரச செயலாளர்களுடன் இருதரப்பு கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளார். அத்துடன், இலங்கை-ருமேனியா பாராளுமன்ற நட்புறவுக் குழுவின் தலைவரையும் அவர் சந்திக்கவுள்ளார்.
மேலும், பிரதி அமைச்சர் ஹேமச்சந்திர அவர்கள் புக்கரெஸ்ட், அராட் மற்றும் கொன்ஸ்டான்டா ஆகிய இடங்களில் வர்த்தக சபைகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வணிகக் கூட்டங்களில் உரையாற்றவுள்ளார். அத்துடன், ருமேனியாவில் வசிக்கும் இலங்கைச் சமூகத்தினரைச் சந்திப்பதற்கும் அவர் திட்டமிட்டுள்ளார்.
